கட்டுரை

திடீரென முளைத்தாரா திசநாயக்கா?

இரா. தமிழ்க்கனல்

பாலுமகேந்திரா படத்தில் வரும் தாத்தாவைப் போல இருக்கும் அந்தப் பெரியவரின் காதருகே சென்று, நடுவயதுப் பெண் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்... சிங்களத்தில்! அதைக் கேட்டதும் ஒரு கணம் பேச்சற்றவரான அவர், அந்தப் பெண் சொன்னதையே பாதியளவு திரும்பச் சொல்கிறார். அவர்  மெதுவாக உடைந்து தேம்பத் தொடங்கியதும் அந்த வீடியோ நிறைவுபெறுகிறது.

இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயக்காவின் தந்தைதான் அவர். இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சமூக ஊடகங்களில் இந்தக் காட்சியை ஒரே நாளில் இலட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். மீண்டும் மீண்டும் பகிரப்படும் காணொலியாக இது மாறியுள்ளது.

ஒட்டுமொத்த இலங்கைத் தீவிலும் இதுவரை நடைபெறாத அதிசயமாகவே அனுரவின் வெற்றி நிகழ்ந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துக்குப் பின்னர் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத ஏழைக் குடும்பத்திலிருந்து இலங்கையின் அதிபராக வந்திருக்கும் முதல்  ‘இளைஞர்’ இவர்.

55 வயதாகும் அனுர குமார திசநாயக்கா, இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் தம்புகேத்தம எனும் கிராமத்தில் பிறந்தவர். அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்தவர், மிக அதிகமான மதிப்பெண்களை எடுத்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட போதும், 1980-களில் அரசுக்கு எதிரான சிங்கள ஆயுதக்குழு மக்கள் விடுதலை முன்னணி(ஜேவிபி)யுடன் பிடிப்போடு இருந்தார். அந்தத் தொடர்பால் அவருக்கு அங்கு சிக்கல் ஆனதால், களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

இயற்பியலில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவருக்கு, தீவிர அரசியலில் ஆர்வம் வந்தது. ரோகண விஜயவீரா என்பவர் தொடங்கிய ம.வி.முன்னணி, 1971ஆம் ஆண்டில் அரசுக்கு எதிராக ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டது. அதில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதையடுத்து, இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்றபோது அதே இயக்கம் தங்கள் மண்ணில் அந்நியப் படைகள் வந்து ஆதிக்கம் செலுத்துவதா என மீண்டும் போர்க்கொடி தூக்கினார்கள். முந்தைய கிளர்ச்சியின்போது ஒரே நேரத்தில் நாடளவில் சுமார் எழுபது காவல்நிலையங்களைக் கைப்பற்றியதைவிட, இரு நாட்டுப் படைகளையும் எதிர்க்கும் அளவுக்கு உக்கிரமானார்கள். ஆனால், இன்றைய அதிபர் தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள சஜித்தின் தந்தை இரணசிங்க பிரேமதாசா அதிபராக இருந்து, அத்தனை சிங்களப் போராளிகளையும் சுட்டுக்கொல்ல வைத்தார். பெரும் இரத்தவேட்டையில் சிக்கிக்கொண்ட ம.வி. முன்னணி, அந்தப் பாதை வழிக்கு ஆகாது என தேர்தல் பாதைக்குத் திரும்பியது. அதே பெயரில் கட்சியாகச் செயல்படத் தொடங்கியது.

கல்லூரிப் படிப்பை 1995இல் முடித்த அனுரா,  இந்த ஜேவிபியின் மாணவர் இயக்கமான சோசலிச மாணவர் இயக்கத்தின் தேசிய அமைப்பாளராக உருவெடுத்தார். அதையடுத்து அந்த இயக்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மையக்குழு உறுப்பினராக ஆனவர், 1998இல் அதன் அரசியல் தலைமைக் குழுவிலும் இடம்பிடித்தார்.

இலங்கைத் தேர்தல் முறைமைப்படி, நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்குகளுக்கு மேல் வாங்கும் கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் என்பதன்படி மொத்தம் 25 எம்.பி. இடங்கள் வழங்கப்படும். 2000ஆம் ஆண்டுத் தேர்தலில் ஜேவிபியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஆன அனுர, கால் நூற்றாண்டு காலத்தை தேர்தல் அரசியலில் நிறைவுசெய்கிறார். அதன் முத்தாய்ப்பாக நாட்டின் அதி உயர் பதவியான அதிபர் நாற்காலியிலும் உட்கார்ந்துவிட்டார்.

சந்திரிகா, இராஜபக்சேக்களின் இலங்கை சுதந்திரக் கட்சி, ஜெயவர்த்தனே, இரணில் வகையறாவின் ஐக்கிய தேசியக் கட்சி என மாறிமாறி நாட்டை ஆண்டு, குடிமக்களைக் கையேந்தவிட்டதால், 2022ஆம் ஆண்டில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அதையொட்டி முன்னரும் பின்னரும் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக அதை நடத்தி, அதிபர் பதவியில் இருந்தும் நாட்டை விட்டும் கோட்டாபய இராஜபக்சேவை ஓடவைத்தது, அனுர தலைமையிலான ஜேவிபி.

பத்தாண்டுகளுக்கு முன்னர் கட்சித் தலைவரான அனுர, பெரும்பான்மை மக்களான சிங்களவர் மத்தியில் ஜேவிபிக்கு பெரும் செல்வாக்கை உருவாக்கினார். ஆனாலும் அதன் மீதான இரத்த வரலாறு நினைவு போகவேண்டும் என்பதற்காக, பல அமைப்புகளையும், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அரசு- தனியார் உயர் அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி என்கிற கூட்டணியை உருவாக்கினார். அதன் தலைமையில்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன், தேர்தலில் போட்டியிட்டு வெறும் 3.16% வாக்குகளைப் பெற்றவர், இப்போது 42.31% வாக்குகளைப் பெறமுடிந்துள்ளது.

இலங்கையைத் தூக்கிநிறுத்த இவர் என்ன செய்யப்போகிறார்? அடுத்ததாக, ஈழத்தமிழர்களுக்கு இவருடைய அரசு என்ன செய்யப்போகிறது என்பன இரண்டும்தான் இப்போது முக்கியமான கேள்விகள்!

பதவியேற்றபின் அளித்த பேட்டி ஒன்றில்,  இந்தியா சீனா இரு நாடுகளும் சம முக்கியம் கொண்டவையே எனத் தெளிவுபடுத்திவிட்டார், அனுர. ஆனால், தேர்தலுக்கு முன்னர் அவர் எதிர்த்த அதானி குழும முதலீடுகள் உட்பட்ட பல இந்திய நிறுவனங்களின் முதலீடுகள் பற்றி இனிதான் தெளிவாகத் தெரியவரும்.

உலக வங்கி தரப்பில் அனுரவின் அரசோடு ஒத்துழைப்பாகச் செயல்பட விரும்புவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, இவருக்கு சாதகமே!

ஈழத்தமிழர் தரப்பைப் பொறுத்தவரை, இந்தியா முன்வைத்த வடக்கு- கிழக்கு ஒரே மாகாணம் எனும் தீர்வை, ஜேவிபிதான் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குப்போட்டு காலிசெய்தது. நிலம், காவல்துறை அதிகாரங்களை மாகாணத்துக்கு வழங்கும் ஒருவகையான கூட்டாட்சியை, இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ஜேவிபி அனுர தரப்பு தெளிவாக நிராகரித்துப் பேசியது. அதாவது, சும்மா வெற்று வாக்குறுதியாகக்கூட வடகிழக்கு மாகாணம்- ஈழத்தமிழர் தாயகம் என்பதை ஜேவிபி ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்தப் பின்னணியில்தான், அதிபர் தேர்தலிலும் ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் இசுலாமியர்கள், மலையகத் தமிழர்கள் ஜேவிபியின் அனுரவுக்கு மிகச் சொற்பமாகவே வாக்களித்தனர். வடக்கு மாகாணத்தில் புதிய தமிழ்க்கட்டமைப்பு வேட்பாளர் அரிய நேத்திரனுக்கு 2.26 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளதும் முக்கியமானது.

இனப்பிரச்னை கரும்புள்ளியை அழிக்காமல் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்குமான முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படுமா என்பது கேள்வியே!

“இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் கி்ளர்ச்சி நாட்டில் ஒரு முறைமை மாற்றத்தை - அதாவது சிஸ்டம் சேஞ்சை எதிா்பாா்த்ததாகவே இருந்தது. ஆளும் தலைவா்கள் மாறினாா்களே தவிர, பழைய நிலைமைதான் தொடர்ந்தது. ரணிலின் ஆட்சி பொருளாதார குற்றங்களைச் செய்தவர்கள்  என அடையாளம் காணப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பதிலாக அவர்களைப் பாதுகாத்தது.

முறைமை மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், பாரம்பரிய கட்சிகளை நிராகரித்துவிட்டு புதிய தலைமை ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்று சிங்களவா்கள் சிந்தித்தனர். இதன் விளைவுதான் அநுரகுமாரவை மக்கள் தெரிவு செய்தது.”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram